தமிழகத்தில் மின்வெட்டுக்கு வாய்ப்பு இல்லை - மின்சார வாரியம்

தமிழகத்தில் 30 ஆயிரம் மெகாவாட்டிற்கு மின் நிறுவு திறன் உள்ளதால், மின்தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டிற்கு வாய்ப்பு இல்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மின்வெட்டுக்கு வாய்ப்பு இல்லை - மின்சார வாரியம்
x
தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 15 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது.மேலும் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி, அதிகபட்ச மின்தேவையாக 16 ஆயிரத்து 151 மெகாவாட்டை மின்வாரியம் பூர்த்தி செய்துள்ளது. மின்தட்டுப்பாட்டை போக்கும் விதமாக மின்வாரியத்தின் நிறுவு திறனும் தற்போது அதிகரித்துள்ளது.அதன்படி, மரபுசார் எரிசக்தி ஆதாரங்களான நீர் மின் நிலையங்கள் 2 ஆயிரத்து 314 மெகாவாட்டும், அனல் மின் நிலையங்கள் மூலம் 4 ஆயிரத்து 320 மெகாவாட்டும், எரிவாயு நிலையங்களில் 516, மத்திய தொகுப்பிலிருந்து  6 ஆயிரத்து 312 மெகாவாட் என 18 ஆயிரத்து 414 மெகாவாட் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதேபோல,மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் மூலம் 11 ஆயிரத்து 776 மெகாவாட் என ஆக மொத்தம் 30 ஆயிரத்து 191 மெகாவாட்டிற்கான நிறுவு திறனை மின்வாரியம் ஏற்படுத்தியுள்ளது.ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை காற்று சீசன் காலங்களில் மட்டும் காற்றாலைகள் மூலம் சராசரியாக 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது.மாநிலம் முழுவதும் சராசரியாக 14 ஆயிரத்து 500 மெகாவாட் வரை மின்சார பயன்பாடு இருந்து வந்தது.இதில் சென்னை மாநகருக்கு மட்டும் 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.இந்த நிலையில் வெப்பமான காலநிலை, தொழிற்சாலைகளின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இம்மாத தொடக்கத்தில் இருந்து மின்சாரத்தின் தேவை கணிசமாக உயர்ந்துவிட்டது.இந்த ஆண்டு கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த மாதம் இறுதியிலேயே குறிப்பாக மார்ச் 29ஆம் தேதி மின்சாரத்தின் தேவை 15 ஆயிரத்து 478 மெகாவாட்டை தாண்டியது. இதற்கு ஏற்ப அனல் மின்நிலையங்கள், நீர் மின்நிலையங்கள், கேஸ் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் பெறப்பட்டதால் தங்குதடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.ஒரு சில இடங்களில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன.இதற்கு காரணம், திடீரென அதிக மின்சார பயன்பாட்டால் மின்வாரிய சாதனங்களில் பழுது ஏற்பட்டு, மின்தடை ஏற்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்