எங்கு திரும்பினும் தண்ணீர் தட்டுப்பாடு - நிரந்தர தீர்வு என்ன ?

சென்னையில் எங்கு திரும்பினும் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க, கைகொடுத்து வரும், கல்குவாரிகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் குறித்த ஒரு தொகுப்பை காணலாம்..
எங்கு திரும்பினும் தண்ணீர் தட்டுப்பாடு - நிரந்தர தீர்வு என்ன ?
x
கடந்த ஆண்டு மழை பொய்த்ததால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காட்சியளிக்கும் நிலையில்,  நிலத்தடி நீர் மட்டமும் கைவிரித்துவிட்டது. சென்னையி​ன் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வானம் பார்த்த பூமிகளாக காட்சியளிக்கின்றன. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி ஆகும். 

இதில் தற்போது 118 மில்லியன் கன அடியாகவும், 3231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 187 மில்லியன் கன அடியாகவும், 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 2 மில்லியன் கனஅடியாகவும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இதே போன்று 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரி முற்றிலுமாக வறண்டு விட்ட நிலையில், தற்போது புழல் ஏரியில் இருந்து மட்டும் வினாடிக்கு 80 கன அடி தண்ணீர் எடுக்கப் பட்டு சென்னைக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அங்கும் குறைந்த அளவே தண்ணீர் கையிருப்பில் உள்ளதால் இன்னும் சில தினங்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏரிகளை தூர்வார அரசு காலம் தாழ்த்தியதே, தண்ணீர் பற்றாகுறைக்கு காரணம் என ஒருதரப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். சென்னைக்கு குடிநீர்  தட்டுப்பாடு ஏற்படும் என்ற அபாய சங்கு ஒலிக்க இருந்த நிலையில், கை கொடுக்க முன்வந்துள்ளன, சென்னையை சுற்றி உள்ள கல்குவாரிகள். கல்குவாரிகளில் தேங்கி இருக்கும் நீரை  சென்னைக்கு குடிநீராக பயன்படுத்தும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  
சென்னை புறநகர் பகுதியான பம்மல், அனகாபுத்தூர்  பகுதிகளில் கல்குவாரி குட்டையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை குடிநீராக மாற்ற 6 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு கருவியின் மூலம் , கல்குவாரிகளில் இருந்து   தினமும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. 

கல்குவாரிகளை மட்டும் நம்பாமல் பல்வேறு மாற்று ஏற்பாடுகளையும் குடிநீர் வடிகால் வாரியம் செய்து வருகிறது. திருவள்ளூரை அடுத்த மாகரல்,கீழனூர், கோடுவளி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய ஆழ்துளை கிணறுகளில் இருந்து ராட்சத மோட்டார்கள் வைத்து நாளொன்றுக்கு 65 மில்லியன் லிட்டர் எடுக்கப்பட்டு குழாய் மூலம் சென்னை புழலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு  நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது.

ராட்சத மோட்டார்கள் வைத்து நிலத்தடி நீர் உறிஞ்சப் படுவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடல் நீர் பரவும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நீர்வளத்தை பாதுகாக்க மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ஆரணி மற்றும் கொற்றலை ஆறுகளையும் துணை நீர்நிலைகளையும் தூர்வாரி பராமரித்து தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்று உள்ளது. அதன் மூலம் மழைக்காலங்களில் உபரி நீர் வெளியேறி கடலில் கலப்பதை தடுக்கலாம் என்றும் விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும்  கூறியுள்ளனர்.

கல்குவாரிகளும் ஆழ்குழாய் கிணறுகளும் எத்தனை நாட்களுக்கு சென்னையின் தாகத்தைப் போக்க கைகொடுக்கும் என்பது சந்தேகமே. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இனியாவது  அலட்சியம் காட்டாமல்,  ஏரிகள் அனைத்தையும் துரிதமாக தூர்வார வேண்டும் என்பதும் மழைகாலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை அவற்றில் சேகரிக்க வேண்டும் என்பதும்   சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்