"கூடுதல் பார்வையாளராக வெளி மாநிலத்தவரை நியமிப்போம்" - சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
வெளி மாநில கூடுதல் பார்வையாளரை நியமித்து மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தாரர் சம்பூரணம் நுழைந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு, வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரியை கூடுதல் பார்வையாளரை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட பணியிட மாற்ற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என, இடமாற்றம் செய்யப்பட்ட மதுரை ஆட்சியர் நடராஜன் தரப்பில் இணைப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த இணைப்பு மனுக்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Next Story