ஊட்டியில் சூறாவளி காற்றுடன் கன மழை : போக்குவரத்து பாதிப்பு - வாகன ஓட்டிகள் அவதி
நீலகிரி மாவட்டம் ஊட்டி, தொட்டபெட்டா, நடுவட்டம், லவ்டேல், பாலாடா, நஞ்சநாடு ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, தொட்டபெட்டா, நடுவட்டம், லவ்டேல், பாலாடா, நஞ்சநாடு ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக ஊட்டி மேட்டுப்பாளையம் சாலையில் சேரும் சகதியுமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இரண்டு மணி நேரம் பலத்த மழை : தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி
நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்றுவட்டார பகுதிகளான அருங்காடு, பாய்ஸ்கம்பெனி, சேலாஸ் காட்டேரி, பர்லியார் போன்ற பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரமாக பலத்த மழைபெய்தது. இதனால் மலைபாதையில் வாகனங்களை இயக்க வாகன ஒட்டிகள் சிரமம் அடைந்தனர். மழையினால் தேயிலை மகசூல் அதிகரிக்கும் என்பதால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெப்பத்தை தணித்த திடீர் கனமழை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தில் திடீர் என பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடை வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், ஒரு மணி நேரமாக பெய்த கனமழையால் அங்கு குளிர்ச்சி நிலவியது.
திடீர் மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
சேலத்தில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழையிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
தொடரும் சாரல் மழை - ஃபானி புயலின் தாக்கமா ? - பொதுமக்கள் அச்சம்
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் தொடர்ந்து சாரல்மழை பெய்தது. இந்நிலையில், பொதுமக்களிடையே தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள ஃபானி புயலின் தாக்கமா என்ற அச்சம் எழுந்துள்ளது. மதியம் வரை வெயில் காணப்பட்ட நிலையில், திடீரென மேகம் இருண்டு மழை பெய்ய தொடங்கியுள்ளது.
Next Story