சுற்றுலா பயணிகளை தன் பக்கம் ஈர்த்துள்ள பிச்சாவரம்...

சினிமா படப்பிடிப்பு தளமான பிச்சாவரம் கோடை விடுமுறை தொடங்கியதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்பக்கம் ஈர்த்துள்ளது.
x
உலகிலேயே ஆசிய கண்டத்தில் அதிகம் காணப்படும் சுரபுன்னை மரம் பிச்சாவரத்தின் வரம். குகை வளைவுகள் போல், செழித்து காணப்படும் அந்த மரங்களின் இடையே சப்தமில்லாமல் துடுப்பு படகில் பயணிப்பது ரசனையானது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கடற்கரையை ஒட்டிய அந்த பரந்து விரிந்த சதுப்பு நில காட்டில் எம்.ஜி.ஆர். முதல், சரத்குமார், அர்ஜூன் உள்ளிட்ட ஏராளமானோர் படப்பிடிப்பு நடத்திய இடம்தான் இந்த பிச்சாவரம். பொதுவாக கோடை வந்தாலே, கொடைக்கானல், ஊட்டி என பல்வேறு இடங்களுக்குச் செல்ல திட்டமிடும் பயணிகளுக்கு, உள்ளங்கை நெல்லிக் கனியாக இருக்கும் பிச்சாவரம் தெரியாமல் போவது ஆச்சரியம். பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மோட்டர் சவாரி மற்றும் துடுப்பு சவாரி செய்யும் அவர்கள், முக அலங்கார மற்றும் விளையாட்டு பொருட்களை வாங்கி  குதூகலமிட்டு வருகின்றனர். ஆனால், அதிக கட்டண வசூல், படகை பாதி வழியில் நிறுத்தி கூடுதல் வசூல், உரிய தூரம் அழைத்துச் செல்லாமல் படகை பாதியில் திருப்புவது, எம்.ஜி.ஆர். திட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறுவது என முறைகேடுகளும் அரங்கேறுவதாக பயணிகள் வேதனைப்படுகின்றனர். குடிநீர் வசதி, உணவகம், கழிப்பறை போன்ற வசதிகள் இல்லாதது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பது பயணிகளின் நம்பிக்கை.


Next Story

மேலும் செய்திகள்