ரேஷன் பொருட்களுக்காக சாலையோரம் காத்திருக்கும் ராணுவத்தினரின் குடும்பங்கள்
ஒரு நாள் மட்டுமே வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்காக நாட்டை காக்கும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினரின் குடும்பம், இரவு பகல் பாராமல் சாலையில் நின்று தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மூவாயிரம் பேர் ராணுவத்தில் உள்ளனர். முன்னாள், இன்னாள் ராணுவத்தினரின் குடும்பங்களுக்கு, காரைக்குடி கல்லூரி சாலையில் இருக்கும் என்.சி.சி. 9 வது பட்டாலியன் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், மாதத்தின் கடைசி நாட்களில் வழங்கப்படுவதால், கூட்டம் அலைமோதியது. நாட்டை காக்கும் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பைகளை வரிசையில் வைத்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்தந்த மாத பொருட்கள், அடுத்த மாதத்தில் வழங்கப்படாது என்பதாலும், மாதத்தின் கடைசி நாட்களில் பொருட்களை வழங்குவதாலும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், 15 நாட்களுக்கு முன்பிருந்தே ரேஷன் பொருட்களை வழங்கினால், கூட்டத்தை தவிர்க்க ஏதுவாக இருக்கும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story