மழை தராமல் ஏமாற்றிய ஃபானி புயல் : அக்னி வெயிலை சமாளிக்க போவது எப்படி?
சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்யும் என்ற எதிர்ப்பார்ப்பும் பொய்த்து போயுள்ளது.
தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. இதனால் சென்னையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த மழையால் சென்னையில் ஏரிகள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கோடையின் குடிநீர் பற்றாக்குறை தீரும் என்று நம்பப்பட்டது. ஆனால் வானிலை நிலவரப்படி, வங்கடலில் உருவாகி வரும் புயல் ஒடிசா பகுதியை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் சென்னையில் மழை பெய்யும் வாய்ப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. தற்போதே சென்னையில் குடிநீர் பற்றாக்குறை இருக்கும் நிலையில், அடுத்த மாதம் அக்னி வெயிலால் 40 டிகிரி செல்சியஸ் அளவில் வெயில் சுட்டெரிக்கும். அப்போது மேலும் நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன் குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் வறண்டு விட்டதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புழல், சோழவரம் ஆகிய இரு ஏரிகளிலும் ராட்சத மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு அங்கு குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரை குழாய் மூலம் சேகரித்து அவை சுத்திகரிக்கப்பட்ட பின்னர் சென்னை மக்களுக்கு வழங்கப்படுகிறது. வழங்கப்படும் குறைந்த அளவும் நீரும் தீர்ந்து போனால் அடுத்து என்ன என்பதே தற்போது நம் முன் நிற்கும் பெரிய கேள்வி...?
தமிழக அரசு குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள பொதுமக்கள் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் தமிழகத்திற்கு தரவேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை உடனடியாக பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் நிலைகள் அனைத்தும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதாலும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாகவும் பாசனத்திற்கு போதிய தண்ணீர் இன்றி பரிதவித்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தி, நிலத்தடி நீர் ஆதாரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story