கோமதி வெற்றிக்கு தந்தை போல் நின்று உதவிய தோழி
தங்க மங்கையாக கோமதி மாரிமுத்து உருவான பெருமை, பிரான்ஸிஸ் மேரி என்ற காவல் துறை உதவி ஆய்வாளரையே சாரும். கோமதிக்கு இன்னொரு தந்தையாகவே மாறியுள்ளார் மேரி. அவரை பற்றிய தொகுப்பு..
கத்தார் நாட்டில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற பிறகு கோமதி மாரிமுத்து தொடர்புகொண்டு, முதலில் பேசிய நபர் பிரான்ஸிஸ் மேரி. இவர் சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து பிரிவில் உதவி ஆய்வாளராக உள்ளார். 2009ம் ஆண்டு திருச்சியில் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் போதே மேரிக்கும், கோமதிக்கும் நட்பு தொடங்கியது.
கல்லூரியில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மேரியும், கோமதியும் கலந்து கொண்டுள்ளனர். இதில் மேரி வெற்றி பெற, தோல்வி அடைந்த கோமதி அழுதுள்ளார். இதனையடுத்து அவரை தேற்றி ஊக்கம் அளித்துள்ளார், மேரி .
ஒரு விபத்தில் சிக்கி மேரியின் தடகள கனவு பறிபோக, தமது கனவை, தனது தோழியான கோமதி நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு எடுத்தார் மேரி. இதனால் சொந்த செலவில் கோமதியை சென்னைக்கு அழைத்து பயிற்சி அளித்துள்ளார் மேரி. ஆனால் திடீரென தந்தை மறைவால் கோமதி தடுமாறினார். இதனால் கோமதிக்கு முதுகெலும்பு போல் இருக்க வேண்டும் என தீர்மானித்து உதவி செய்துள்ளார். பல தடைகளுக்கு பிறகு கோமதி தங்கம் வென்று வீடியோ காலில் பேசிய போது இருவரும் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளனர்.
தமது தந்தை மறைவால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட தமக்கு பக்க பலமாக மேரி தான் இருந்ததாக நெகிழ்வுடன் கூறும் கோமதி. சென்னை விமான நிலையத்தில் மேரியை கண்டவுடன் கட்டிபிடித்து அன்பை பரிமாறிக் கொண்டுள்ளார்.
கோமதியின் வெற்றி ஒட்டுமொத்த கிராமத்து பெண்களுக்கான நம்பிக்கையாக பார்த்தாலும் அதற்கு முழு காரணம் அவரது தோழியான பிரான்ஸிஸ் மேரியை சாரும்.
Next Story