கோடை வெப்பத்தால் நீர் இருப்பு குறைந்த பாபநாசம் அணை
கோடை வெயிலின் வெப்பத்தால் நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்துள்ளதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.
கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே100 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை நெல்லை மாவட்டத்தில் நிலவி வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்ட தண்ணீர் தேவைக்கான ஆதாரமாக கருதப்படும் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. பாபநாசம் அணையின் முழுக் கொள்ளளவான 143 அடியில் தற்போது 17 அடிக்கு தான் நீர் உள்ளது. இதில் 16 அடிக்கு சேரும் சகதியும் தான் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கொள்ளளவில் மிகச் சிறியதான சேர்வலாறு அணையின் நீர்மட்டமும், முழு கொள்ளளவான 156 அடியில், தற்போது 48 அடி அளவுக்கு தான் நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணையில், முழு கொள்ளளவான 118 அடியில் இன்று காலை நிலவரப்படி 75 அடி நீர் இருப்பு உள்ளது. இதனிடையே, பாபநாசம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஒன்றரை லட்சம் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மணிமுத்தாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீர் தான் ஸ்ரீவைகுண்டம் வரை உள்ள மக்களுக்கு குடிநீருக்கு பயன்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story