சாலை போட முயன்ற 5 பேருக்கு ரூ.30,000 அபராதம்...
ராசிபுரம் அருகேயுள்ள போதமலை வனப்பகுதியில் சாலை அமைக்க முயன்ற 5 பேருக்கு தலா 30 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து வனச்சரகர் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது போதமலை மலைக் கிராமம் இது கடல்மட்டத்தில் இருந்து சுமார் மூவாயிரம் அடி உயரத்தில் உள்ளது. இங்கு மேலூர், கீழூர், கெடமலை என 3 குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க சுமார் பதினொரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கரடுமுரடான பாதையில் நடந்து தான் கீழே வரவேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் மலை கிராம இளைஞர்கள், நண்பர்களின் உதவியுடன் Jcp. இயந்திரத்தை வைத்து யாருக்கும் தெரிவிக்காமல் கெடமலைப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட வன அலுவலர் காஞ்சனா உத்தரவின் பேரில், வனத்துறையினர் சென்று பார்த்த போது அங்கு காடுகளில் பாதை அமைத்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அண்ணாமலை, மணிகண்டன், தங்கவேல், மனோகரன், குப்பன் ஆகிய 5 பேரையும் கைது செய்த வனத்துறை அதிகாரிகள், தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதித்து அவர்களை விடுவித்தனர்.
Next Story