சின்ன வெங்காயம், பச்சமிளகாய் காம்போவில் பழைய சோறு...
மதுரை மாட்டுத் தாவணியில் ஜல்லிக்கட்டு காளையும், கட்டுடலுமாக நிற்கும் வீரன் என வரவேற்பு காட்டும் ஒரு கடையில் அற்புதமான பாரம்பரிய உணவை மீட்டுத் தந்துள்ளனர்.
நாவில், எச்சில் ஊறும் உணவுகள் எத்தனை நம்மை வசீகரித்தாலும், அவை உடலுக்கு வலு சேர்க்குமா? என்பது கேள்வி குறி. கம்பீர உடலுக்கு வலு சேர்த்த பாரம்பரிய உணவு மீண்டும் நம்மை அழைக்கிறது, வாருங்கள் பார்ப்போம். வீட்டுக்குள் முடங்கி, சிலந்தி வலையில் சிக்கி தவிப்போரை, குறிவைத்து ஆன்லைன் உணவகங்கள் கடை விரித்துள்ளன. அங்கு, கிடைக்காதவை, கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற உணவுகள். சுட்டெரிக்கும் வெயிலில், உடலை வியர்வை நனைக்க, சோர்ந்து போகும் நேரத்தில், நொடியில் சக்தியை மீட்டுத் தந்தது பழைய சோறு கஞ்சி.
மதுரை மாட்டுத் தாவணியில் ஜல்லிக்கட்டு காளையும், கட்டுடலுமாக நிற்கும் வீரன் என வரவேற்பு காட்டும் ஒரு கடையில், அற்புதமான பாரம்பரிய உணவை மீட்டுத் தந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் வந்து அமர, அவர்கள் முன், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், வத்தல் இவைகளோடு, மண் பாண்டத்தில் வருகிறது அற்புதமான பழைய சோறு. உண்மையில், நீண்ட வருடங்களுக்கு பிறகு சாப்பிட்டதாக கூறும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி புதியது. கார்போஹைட்ரேட் உள்பட சக்திகளை உடலில் சேர்க்கும் இந்த பழைய சோறு, அந்தப் பகுதியில் பிரபலமாகி வருகிறது. வெயிலுக்கு இதம் சேர்ப்பது மட்டுமல்ல, உடலை குளிர்வித்து நலம் சேர்ப்பதாகவும் கூறுகின்றனர் வாடிக்கையாளர்கள்.
பொருளாதார தேவையின் அவசியம், நம்மை வேகமாக தள்ளும் வாழ்க்கை. இந்த ஓட்டத்தின் பாதையில் உணவை மறந்து விடுகிறோம். அதில், ஆரோக்கியமான உணவை தேட நேரமில்லை என்பதும், மாற்றுக் கருத்தில்லாத உண்மை. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அவசர உணவுகளைவிட, ஆரோக்கியமான ஆயுளை நீட்டிக்கும் இந்த பழைய சோற்றின் மகத்துவம் என்றும் மாறாதவை. அம்மாவின் கை ருசி, மண் மனம் மாறாதவை என எப்படி பார்த்தாலும் பழைய சோற்றுக்குத்தான் முதலிடம். சின்ன வெங்காயம், பச்சமிளகாய் காம்போவில், பழைய சோற்றை ருசிக்காதது, இந்த பிறப்பில், அமிழ்தத்தை வேண்டாம் என்று சொல்வதற்கு சமம்.
Next Story