"100 சதவீத தபால் வாக்குகள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்" - தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு
வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தேர்தல் பணி சான்றிதழ் மற்றும் அவர்கள் 100 சதவீதம் தபால் வாக்கு அளிப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை தி.மு.க. கோரியுள்ளது.
இதுதொடர்பாக தி.மு.க. சட்டப்பிரிவு செயலாளர் ஆர்.கிரிராஜன், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு மனு அளித்துள்ளார். அதில், தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முழுமையாக தேர்தல் பணிக்கான ஆவணம் மற்றும் தபால் வாக்கு அளிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலையும் மீறி, தேர்தல் பணி ஆவணங்களை வழங்க மறுத்து வருவதாக கூறப்படும் நிலையில், 100 சதவீத தபால் வாக்கு பதிவாவதை உறுதி செய்ய, அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என தி.மு.க. அதில் வலியுறுத்தி உள்ளது. தபால் வாக்குகளை நேர்மையான முறையில் பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
Next Story