எட்டுவழி சாலை திட்டம் - இன்று தீர்ப்பு
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.
மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் சென்னை-சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழித்தடங்கள் அமைக்க ஆயிரத்து 900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு, கடந்த 2018 மே மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த திட்டத்தால் வனப்பகுதிகள், விவசாய நிலங்கள், குளங்கள், மரங்கள், 8 மலைகள் பாதிக்கப்பட உள்ளதாக கூறி
அரசு பிறப்பித்த அறிவிப்பாணைகளை ரத்து செய்யக் கோரியும், திட்டத்தை ரத்து செய்ய கோரியும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் உள்ளிட்ட 35 விவசாயிகளும், பா.ம.க., எம்.பி. அன்புமணியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் ஒப்புதல் கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், ஒப்புதல் இல்லாமல் திட்டத்தை துவங்க போவதில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் 8 வழிச் சாலை திட்டத்திற்காக விவசாயிகளை நிலத்தை விட்டு அப்புறப்படுத்தக் கூடாது என கூறிய நீதிபதிகள், நிலம் கையகப்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும், 8 வழிச் சாலை திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
ஆறு மாதங்களுக்கு மேலாக நீடித்த இந்த வழக்கின் விசாரணை, டிசம்பர் 14ஆம் தேதி முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், தீர்ப்பு திங்கள்கிழமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story