தவறான சிசிச்சை என எப்படி கூறமுடியும், ஆணையம் அமைதி காத்தது ஏன்? - அப்பல்லோ கேள்வி
ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரிஅப்பலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்த போது காரசார வாதம் நடைபெற்றது. அப்பலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர் பி.எஸ். ராமன், சுதந்திர இந்தியாவில் அரசியல் தலைவருக்கு வழங்கிய சிகிச்சை போதுமானதா என விசாரிக்கப்படுவது இதுவே முதல்முறை என்றார்.
தவறான சிகிச்சை வழங்கியதாக ஆணைய வழக்கறிஞர் எப்படி கூற முடியும்?, இதற்கு ஆணையம் அமைதி காத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், ஜெயலலிதாவுக்கு வழங்கிய சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய ஆணையம் ரகசியமாக மருத்துவ குழுவை நியமித்ததாக வாதிட்டார்.
தவறான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், அரசு சார்பில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் அது தொடர்பாக அரசுக்கு தகவல் அனுப்பாதது ஏன்? என அப்பலோ தரப்பு வழக்கறிஞர் வினவினார்.
இதனிடையே, ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுந்தரேஷ், ஆணையம் நியமித்த மருத்துவ குழு அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், விசாரணை 90 சதவீதம் முடிந்து விட்டதாகவும் கூறினார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.
Next Story