அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே சுட்டெரிக்கும் வெயில் : வெயிலை தணிக்க பழங்களை தேடிச் செல்லும் மக்கள்
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இயற்கையான முறையில் கிடைக்கும் பழங்கள் மீது மக்களின் கவனம் திரும்பி இருக்கிறது. இந்த சீசனில் என்ன சாப்பிடலாம்? எது கூடாது ? என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...
கோடை காலம் தொடங்கி விட்டது என்பதை நிரூபிக்கும் விதமாக காலை 10 மணிக்கே சென்னையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியிருக்கிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் சாலையோர மர நிழல்களில் மக்கள் தஞ்சமடைவதை பார்க்க முடிகிறது. இவர்களை போன்றவர்களுக்காகவே சாலையோரங்களில் நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
கோடை சீசனுக்கு ஏற்றார் போல தர்பூசணி, முலாம்பழம், கிர்ணி பழம் போன்ற பழங்கள் மற்றும் இளநீர் ஆகியவை கிடைப்பது நமக்கான வரப்பிரசாதம் தான். உடலில் நீர்ச்சத்துகளை தக்க வைக்கும் பழங்களுக்கு இந்த சீசனில் மவுசு அதிகம். இதன் காரணமாகவே இந்த ஆண்டு விலையும் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது.
குறிப்பாக வெயிலில் விளையாடும் சிறுவர்களுக்கு உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். ஆனால் இதனை சரிசெய்ய உதவியாக இருப்பது இதுபோன்ற பழங்கள் தான். பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பானங்களை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் பழங்களை கொடுப்பது ஆகச் சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.
உணவு கட்டுப்பாடு இந்த காலகட்டத்தில் அவசியமானது. எனவே அதையும் பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும். பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் பானங்கள், அதிகமான மசாலா பொருட்களை இந்த காலத்தில் தள்ளிவைத்து விட்டு இயற்கைக்கு மாறுவது எப்போதும் உங்களை ஆரோக்யத்திற்கு உத்தரவாதம் அளிக்கும்..
Next Story