மாசிமகம் வழிபாடு : பல்வேறு கோயில்களில் பக்தர்கள் வழிபாடு
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி உடனுறை வேதநாயகி அம்பாள் கோவிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் சாந்தநாத சுவாமி மற்றும் வேதநாயகி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுராந்தகம் :
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த கோதண்டராமர் கோவில் மாசி மக தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கோவிலுக்கு எதிரே உள்ள குளத்தில் தெப்பத்தில் ஸ்ரீ கருணாகரப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தெப்பத்தில் வலம் வந்தனர். அப்போது கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டு தெப்பத்தில் உள்ள உள்ள கருணாகரன் பெருமாளை பக்தர்கள் வழிபட்டனர்.
சத்தியமங்கலம் :
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள கெஜஹட்டி ஆதி கருவண்ணராயர் பொம்மதேவியார் கோயிலில் மாசிமகம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. கோவிலில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் நூற்றுக்கணக்கான கிடாக்களை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். வழிபாடு நடத்த தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் முகாமிட்டு அங்கேயே சமைத்து உறவினர்களுக்கு விருந்திட்டு மகிழ்ந்தனர். ஆண்டுக்கு ஒருமுறை மாசிமகம் திருவிழாவிற்கு மட்டுமே இக்கோயில் அமைந்துள்ள வனப்பகுதிக்குள் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி :
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாசிமாத பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெற்றது. ஒவ்வொரு மாதம் பௌர்ணமி நாளன்று மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நான்கு மாடவீதிகளில் உலா வருவது வழக்கம். அதேபோல் இந்த மாசி மாதம் பவுர்ணமியையொட்டி மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் பொங்க தீபமேற்றி வழிபட்டனர்.
கடலூர் :
கடலூர் துறைமுகம் பகுதியில் மாசிமகம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிராமத்து தெய்வங்கள் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தனர். இரவு முழுவதும் கடலில் கரையோரத்தில் உலா வந்த சுவாமிகளை ஆயிரக்கணக்கனோர் வந்து தரிசித்து சென்றனர்.
அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்ச்சி :
மாசி மகத்தை முன்னிட்டு தனது தந்தையாக பாவித்த வல்லாள மகாராஜாவுக்கு கவுதம நதிக்கரையில் சுவாமி அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. துரிஞ்சலாற்றில் வறட்சி நிலவுவதால், சிமெண்ட் தொட்டி அமைத்து தண்ணீர் நிரப்பி சூலத்திற்கு அபிஷேகம் தீப ஆராதனை செய்யப்பட்டு தீர்த்தவரி நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
திருவெறும்பூர் :
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நாகேஸ்வரி அம்மன் சங்கிலி கருப்பு சுவாமி கோவிலில் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதேபோல் ஏராளமானோர் முளைப்பாரி மற்றும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Next Story