இந்தியாவில் எய்ம்ஸ் உருவான கதை
இந்தியாவில் எய்ம்ஸ் மருத்துவமனையின் வரலாறு மற்றும் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸின் சிறப்பம்சங்களை விவரிக்கிறது இந்த தொகுப்பு....
'எய்ம்ஸ்' என்று சுருக்கமாக அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் துவங்குவதற்கான விதை இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பே தூவப்பட்டது. 1946ம் ஆண்டில், இந்தியாவின் சுகாதார கணக்கெடுப்பு மற்றும் வளர்ச்சி குழு தலைவராக இருந்த ஜோசப் போர் என்பவர், இந்தியாவுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனையும், மருத்துவ கல்லூரியும் வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
அதன் பிறகு இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் ஆகியோர், அதனை செயல் வடிவமாக்க, டெல்லியில் நவீன மருத்துவமனை அமைக்க திட்டமிட்டனர். நியூசிலாந்து நாட்டு நிதி உதவியுடன் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 1952-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு 1956-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை, தன்னாட்சி பெற்ற நிறுவனமாக அறிவிக்கப்பட்டு முதன் முதலாக டெல்லியில் துவங்கப்பட்டது.
தற்போது இந்தியாவின் 9 முக்கிய நகரங்களில் எய்ம்ஸ் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 12 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதில் ஒன்று தமிழகத்தில் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு, மதுரையை அடுத்த தோப்பூரும் அதற்கான இடமாக தேர்வு செய்யப்பட்டது. தமிழக அரசு ஒதுக்கியுள்ள 262 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்து 264 கோடி செலவில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த செலவில் அதிநவீன மருத்துவ சேவையை அளிக்கும்.
அங்கு ஆண்டுக்கு 100 மாணவர்கள், மருத்துவ படிப்பையும், 60 பேர் செவிலியர் படிப்பையும் படிப்பார்கள். 42 வகை படிப்புகள் மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். 750 படுக்கை வசதியுடன் அமைக்கப்பட உள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில், வெளி நோயாளியாக சிகிச்சை பெறுபவர்கள் 10 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். அதேபோல் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுபவர்களிடம் அறை வாடகையாக 35 ரூபாய் மட்டுமே பெறப்படும்.
உலக தரத்திலான சிகிச்சைகளை அளிப்பதற்கு மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்கள் இங்கு பணியமர்த்தப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள், மிகச் சிறந்த மருத்துவ வசதிகளை குறைவான கட்டணத்தில் பெற வரப்பிரசாதமாக வருகிறது, மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை.
Next Story