ஜாக்டோ ஜியோ போராட்டம் : தமிழகம் முழுவதும் கைது நடவடிக்கை

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது
ஜாக்டோ ஜியோ  போராட்டம் : தமிழகம் முழுவதும் கைது நடவடிக்கை
x
விழுப்புரம் - 5 பேர் சிறையில் அடைப்பு

விழுப்புரத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி பகுதியில் 7 பேரை கைது செய்த போலீசார் நீதிபதி வெங்கடேசபெருமாள் முன் ஆஜர்படுத்தினர். அவர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

தஞ்சாவூரில் 7 பேர் கைது

தஞ்சையில் ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் ரங்கசாமி, வேலாயுதம், மதியழகன், இளையராஜா, கலைச்செல்வன், சேகர்,  கண்ணன் ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போராட்டத்தை தூண்டுதல், அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

திருவாரூரில் விடிய விடிய வீடு தேடி கைது செய்த போலீஸ்  

திருவாரூரில் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 500-க்கும் மேற்பட்டோரை விடுவித்த போலீசார்,  ஜாக்டோ ஜியோ அமைப்பினரை மட்டும் விடவில்லை. அரசு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள்
உள்ளே சென்று, அவர்களை மீட்டு அழைத்துச் சென்றனர். இதையடுத்து, காவல் துறையினர்  4 குழுக்கள் அமைத்து,  ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பார்களை வீடு தேடி கைது செய்தனர். 

சேலத்தில் 25 பேர் கைது - இரவில் நீதிபதி முன் ஆஜர்

சேலத்தில் கைது செய்யப்பட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை கைது செய்வதாக  போலீஸ் கூறியதால், அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் 
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கோவிந்தன், உதயகுமார், பாரி உள்ளிட்ட 25 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். 

கோவையில் விடுவிக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம்

கோவையில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் விடுவிக்க விடுவிக்க வலியுறுத்தி, மற்ற அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கோவை காவல்துறை ஆணையாளர் சுமித்சரண் பேச்சுவார்த்தை நடத்தினார்.  ஆனாலும், அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.

நாமக்கல்லில்  ஆசிரியைகள் தரையில் அமர்ந்து போராட்டம்

நாமக்கல்லில் கைது செய்யப்பட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்  தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.  ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை விடுவிக்க போலீசார் மறுத்ததால், 30 க்கும் அதிகமாக ஆசிரியைகள் மண்டபம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். 

திருப்பூரில் 10 பேர் கைது 

திருப்பூரில் கைது செய்யப்பட்ட 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்  தனியார் திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர். போலீசார் விடுவிக்காததால் அவர்களுடன் போரட்டக்குழுவினர் வாக்குவாதம்  செய்தனர். இருப்பினும், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 10 பேரை கைது செய்த போலிசார்,  மற்றவரகளை விடுதலை செய்தனர்.

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கைது - நள்ளிரவில் மறியல் 

சிவகங்கையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 16 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 1000 பேர் வெளியேற மறுத்து இரவு நேரத்தில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

நாகர்கோவில் போராட்டக் குழுவினரை கைது செய்ய எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ  ஒருங்கிணைப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.  நாகர்கோவில் ராமன்புதூரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்ட அவர்களில் போராட்டக் குழுவினரை மட்டும் போலீசார் கைது செய்ய முயன்றது. அவர்களுக்கு ஆதரவாக மற்ற ஊழியர்கள் காத்திருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்