தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு உற்சமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
''பொங்கலோ பொங்கல்'' :
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே எழுந்து, வீட்டின் முன் வண்ண கோலமிட்டு புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்டு வருகின்றனர். பொங்கல் பொங்கும் போது குலவையிட்டு ''பொங்கலோ பொங்கல்'' என்று உற்சாக குரல் எழுப்புகின்றனர். புகழ்பெற்ற கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர்.
தஞ்சை பொங்கல் விழா : வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பங்கேற்பு
தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டையில் மரத்தடியில் பொதுமக்களுடன் இணைந்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது, பின்னர் அங்கு நடைபெற்ற புலியாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், பானை உடைத்தல், கயிறுஇழுத்தல், இளவட்ட கல் தூக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், உள்ளிட்ட கலை நிகழ்ச்கிளும் நடைபெற்றன.
நெல்லை பொங்கல் பண்டிகை : கோயில்களில் சிறப்பு வழிபாடு
பொங்கல் பண்டிகையையொட்டி, நெல்லையில் வீடுகளுக்கு முன் கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கல் வைத்தும், கிழங்கு வகைகள் மற்றும் பச்சை காய்கறிகளை படையலிட்டும், பொதுமக்கள் தைத்திருநாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story