கோடநாடு விவகாரம் : சயன் மற்றும் மனோஜை விடுவித்து நீதிபதி உத்தரவு

மத்திய குற்றப்பிரிவு போலீசார் போதிய ஆதாரம் தாக்கல் செய்யாததாக கூறி, சயன் மற்றும் மனோஜை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோடநாடு விவகாரம் :  சயன் மற்றும் மனோஜை விடுவித்து நீதிபதி உத்தரவு
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடர்பாக தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் கடந்த வெள்ளி கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த வீடியோவில் இடம்பெற்ற அனைவர் மீதும் சென்னை மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அந்த வீடியோவில் பேசியிருந்த சயன் மற்றும் வாளையாறு மனோஜ் ஆகியோரை தனிப்படை போலீசார்  டெல்லியில் கைது செய்தனர். அவர்கள் இருவரையும் விமானம் மூலம் திங்கட்கிழமை அதிகாலையில் சென்னை கொண்டு வந்த மத்தியக் குற்றப் பிரிவு போலீசார், எழும்பூரில் வைத்து 10 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை மேற்கொண்டனர்.

மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் செந்தில் குமார் ஆகியோர் 2 பேரிடமும் தனித்தனியாக 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இருவரையும் மேத்யூ சாமுவேல் எப்படி அணுகினார்,  அவருக்கு யார் யார் உதவி செய்தார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு இருவரையும் எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சரிதா முன் ஆஜர்படுத்தினர்.   நீதிபதி அவர்கள் மீது என்ன என்ன வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
 
சந்தேகங்களை பூர்த்தி செய்தால் மட்டுமே சயான் மற்றும் மனோஜை விசாரணை காவலில்அனுப்ப முடியும் என நீதிபதி சரிதா தெரிவிருந்தார். சில மணிநேரம் எடுத்துக்கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை சைதாப்பேட்டையில் நீதிபதி குடியிருப்பில் உள்ள நீதிபதி சரிதா முன் அழைத்து வந்து மீண்டும் ஆஜர்படுத்தினர். இதையடுத்து மீண்டும் நீதிபதி சரிதா பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 

இறுதியாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் அளித்த தகவல் போதுமானதாக இல்லை என்று கூறி நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி சரிதா மறுப்பு தெரிவித்தார். இத​னைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சயன், ஜாமீன் தாரர்களுடன் வரும் 18-ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்