பொங்கல் பரிசாக ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி

பொங்கல் பண்டிகையை ஒட்டி வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
பொங்கல் பண்டிகையை ஒட்டி வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் தற்போதைய வரி வருவாய் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 616 கோடி ரூபாயாகவும், மொத்த கடன், 3 லட்சத்து 55 ஆயிரத்து 845 கோடி ரூபாயாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.  இதுதவிர பல்வேறு திட்டங்களுக்கு 43 ஆயிரத்து 962 கோடி ரூபாய் கடன் பெறவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில், 

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவது, அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்பதால், பொங்கல் பரிசு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த மனு,  நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, , திட்டத்துக்கு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவாவதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, திட்டத்துக்கு கட்சிப் பணத்தை செலவிட்டால் கேட்க மாட்டோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், அரசு பணத்தை செலவிடுகிறீர்கள், எந்த நோக்கத்துக்காக ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினர்.

இந்தத் தொகையை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த செலவிடலாமே எனத் தெரிவித்த  நீதிபதிகள், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 
ஆயிரம் ரூபாய்  பொங்கல் பரிசு வழங்கக்கூடாது என உத்தரவிட்டனர்.

வறுமை கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கலாம் எனவும் தெரிவித்தனர். மேலும் மனுவுக்கு பதிலளிக்கவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்