அரசு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கிளை எச்சரிக்கை
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளோடு கை கோர்க்காமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
கரூர் நகராட்சிக்கென புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான அரசாணையை நடைமுறைப்படுத்தவில்லை என சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த தவறிய நகராட்சி நிர்வாக செயலர் ஹர்மந்தர் சிங், நிர்வாக ஆணையர் பிரகாஷ், கருர் நகராட்சி ஆணையர் அசோக் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நகராட்சி நிர்வாக செயலர் ஹர்மந்தர் சிங், ஆணையர் பிரகாஷ், கருர் நகராட்சி பொறுப்பு ஆணையர் ராஜேந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
அப்போது நீதிமன்றங்களோடு விளையாடாதீர்கள் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், ஆட்சியாளர்கள் மாறலாம் ஆனால் அரசு மாறாது எனவும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளோடு கை கோர்க்காமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என கூறியதோடு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
எச்சரித்து, வழக்கை வருகிற 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Next Story