நீச்சலில் தொடர் சாதனை படைக்கும் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி
நீச்சலில் பல சாதனைகள் படைத்து மாற்று திறனாளிகளுக்கு ரோல் மாடலாக விளங்கும் இளைஞர் இவர்
நீச்சலில் பல சாதனைகள் படைத்து மாற்று திறனாளிகளுக்கு ரோல் மாடலாக விளங்கும் இளைஞர் இவர்.
மதுரவாயலை அடுத்த கிருஷ்ணா நகரை சேர்ந்த ராஜசேகரன் - வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீராம் சீனிவாஸ். 26 வயதான இவர், பிறந்தது முதலே மூளை வளர்ச்சி குறைந்தும் சரியாக நடக்க முடியாத மாற்று திறனாளியாகவும் இருந்தார்.
இவரை நடக்க வைப்பதற்காக இவரது பெற்றோர் கடும் முயற்சி செய்து வந்தனர். இதற்காக சிறு வயது முதலே டியூப் மூலம் நீச்சல் பயிற்சி அளித்தனர்.
அது சற்று கை கொடுக்க, இன்று அதுவே அவரது வாழ்க்கையாக மாறிவிட்டது. 8 வயதில் தொடங்கிய நீச்சல் பயிற்சி தற்போது வரை நீண்டு கொண்டே செல்கிறது. இதில் ஸ்ரீராமிற்கு ஆர்வம் அதிகம் ஏற்பட்டதால் பெற்றோரும் அவருடன் சேர்ந்து பயணம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக தினமும் உடற்பயிற்சி, தியானம், யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு நீச்சல் பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கும் சென்று நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார். மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய்ப்பு கை நழுவியது. இருந்தபோதும், அதன் ஒரு முயற்சியாக கோவளம் கடற்பகுதியில், சில கிலோ மீட்டர் நீச்சல் அடித்து அசத்தினார். இதேபோல், கடலூரில் இருந்து பாண்டிச்சேரி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்தார். தொடர் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், ஸ்ரீராமிற்கு மாற்று திறனாளிகளின் முன்மாதிரி விருதினை சமீபத்தில், டெல்லியில் துணைக் குடியரசு தலைவர் வழங்கி கவுரவித்தார். தனது அடுத்தகட்ட முயற்சியாக, தனுஷ்கோடி முதல் ராமேஸ்வரம் வரை சுமார் 18 கிலோ மீட்டர், பாக்ஜலசந்தியில் 13 கிலோ மீட்டர் நீந்த முடிவு செய்துள்ளார்.
வழக்கமான நீச்சல் வீரர்களே கடலில் நீச்சல் அடிப்பது கடினம் என்ற நிலையில், மாற்றுத்திறனாளியான ஸ்ரீராமின் சாதனை பாராட்டுக்குரியது.
Next Story