கொடைக்கானலில் அழிந்து வருகிறதா பறவை இனம்?

கொடைக்கானல் மலைப்பகுதியில் பருவநிலை மாற்றம், அழிக்கப்பட்டு வரும் விவசாய நிலங்கள் மற்றும் சோலை மரங்களும் வெட்டப்படுவதால் பறவை இனம் வேகமாக அழிந்து வரும் அதிர்ச்சியை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
x
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் மலைப்பகுதியில்  196 வகையான அரிய வகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன.. பறவைகளுக்கு தேவையான சோலை மரங்கள், புல்வெளிகள் அதிக அளவில் இருந்த காரணத்தால் இனப்பெருக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. ஆனால் தற்போது தனியார் காடுகள் மற்றும் சோலை காடுகளில் இருந்த நாவல், கொட்டலாம்பழம், ஊசி கிலா, தவிட்டு கொய்யா உள்ளிட்ட பறவைகள் விரும்பி உண்ணும் பழ வகை மரங்கள் அதிக அளவு வெட்டப்பட்டுள்ளன. செல்போன் கோபுரங்களால் ஏற்படும் பறவை இன அழிவு குறித்து அறிந்த நிலையில், விவசாயத்தில் அதிக அளவு பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் பயன்படுத்தப்படுவதால் பயிர்களின் பூக்களை உட்கொண்டு பாதிக்கப்பட்டு பறவைகள் அழிந்து வருகின்றன. வனப்பகுதிகளில் உள்ள அந்நிய செடிகளான குங்குலியம், சவுக்கு, பைன் போன்றவற்றினை அகற்றவும், தனியார் தோட்டங்களிலும், வனப் பகுதிகளிலும் சோலை மரங்களை வளர்க்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களால் எழுப்படுகிறது. பொதுமக்கள் பழ மரங்களை, செடிகளை நடவு செய்வது வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், கோடை காலங்களில் பறவைகளுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. உணவு சங்கிலியின் ஓர் முனையில் ஏற்படும் அழிவு மற்றொரு முனையின் அழிவுக்கான ஆரம்பம் என்பதை காலம் உணர்த்தும் வரை பொறுத்திருக்க வேண்டுமா?

Next Story

மேலும் செய்திகள்