ஆளுநர் ஆற்றிய உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய திட்டங்கள்

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய திட்டங்கள் மற்றும் அறிவிப்பு குறித்து பார்ப்போம்.
ஆளுநர் ஆற்றிய உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய திட்டங்கள்
x
ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழகத்தின் பங்கு மற்றும் இழப்பீடு தொகை 7 ஆயிரத்து 214 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. மருத்துவ ஆணையம், அணை பாதுகாப்பு மசோதா விவகாரத்தில், பாகுபாடின்றி தமிழக அரசின் கருத்தை கேட்க வேண்டும் எனக்  கேட்டுக்கொள்ளப்பட்டது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என அந்த உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மீன்வளர்ப்பு மையம், உருளை மற்றும் வாழை ஆராய்ச்சி மையங்களை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. கஜா புயலில் பாதிக்கப்பட்ட ஒரு லட்சம் குடிசை வீடுகளுக்கு பதில் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கஜா புயல் மறுசீரமைப்பு பணிக்கு 900 கோடியே 31 லட்சம் ரூபாய் கூடுதலாக விடுவித்த மத்திய அரசுக்கு ஆளுநர் உரையில் நன்றி தெரிவிக்கப்பட்டது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி காவிரியின் எந்த பகுதியிலும் அணை கட்டக் கூடாது  என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

தமிழக மீனவர் பிரச்சினை குறித்து இலங்கை அரசுடன் இணக்கமாக பேசி மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அந்த உரையில் கோரப்பட்டுள்ளது.  சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டுதல், அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. 

பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில், திருவாரூர் தவிர மற்ற மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரங்களில் மின்சார பேருந்துகள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ஆளுநரை உரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயிரத்து 652 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக அதில் உறுதிஅளிக்கப்பட்டிருந்தது. 

ஆயிரத்து 436 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் திட்டத்திற்கு  மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. உலக வங்கி உதவியுடன், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள குடிசை பகுதியை மேம்படுத்துவதற்கான திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஜப்பான் நிதியுதவியுடன் மாதவரம்-சோழிங்கநல்லூர்-கோயம்பேடு ஆகிய வழித்தடங்களில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணி விரைவில் தொடங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் வானூர்தி சாதனங்கள் தயாரிப்பதை ஊக்கப்படுத்த, தொழில் கொள்கையை விரைவில் வெளியிடப்படும் என அந்த உரையில் கூறப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்