கடலூர் மாவட்டத்தை தானே புயல் தாக்கி 7 ஆண்டுகள் நிறைவு...

கடலூர் மாவட்டத்தை தானே புயல் தாக்கி 7 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அரசு அறிவித்த திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
x
கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கடலூர் மாவட்டத்தை தானே புயல் தாக்கியது. அதிகாலை வீச தொடங்கிய தானே புயல் கோர தாண்டவமாடியது. கடல் சீற்றம் காரணமாக பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன. சுழன்றடித்த சூறாவளி காற்றால், லட்சக்கணக்கான மா, பலா, வாழை, தென்னை, முந்திரி  உள்ளிட்ட மரங்கள், விவசாய பயிர்கள்,  ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள், சாய்ந்தன. ஏராளமான வீடுகள், மீனவர்களின் படகுகள் சேதமடைந்தன. மின்சாரம், குடிநீர், தொலை தொடர்பு வசதியின்றி மக்கள் பலநாட்கள் பரிதவித்தனர். தானே புயல் பாதித்த கடலூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கபபட்டு பசுமை வீடுகள், புதை மின் வழித்தடம் உள்ளிட்ட பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் 7 ஆண்டுகள் ஆகியும் எந்த திட்டமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சுனாமி, புயல் என இயற்கை சீற்றங்களால் தொடர்ந்து பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தை இயற்கை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.   

Next Story

மேலும் செய்திகள்