கஜா நிவாரணம் - காரசார வாதம்
மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத் தொகையை கஜா புயல் நிவாரணத்திற்கு தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கஜா புயல் பாதிப்புக்கு இழப்பீடுகளை உயர்த்தி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத் தொகையில் போதுமான அளவு நிதி இருந்தும், கஜா புயல் நிவாரணங்களுக்கு வழங்கவில்லை என்றார்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், மத்திய குழுவின் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நிவாரணம் வழங்க இயலும் எனவும் அதற்காக விளக்கம் கேட்கப்பட்டது எனவும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசுத்தரப்பில் அளிக்கப்பட்ட விபரங்கள் போதுமானவையாக உள்ளதா? எப்போது முடிவெடுக்கப்படும்? என்பது குறித்து தெரிவிக்க உத்தரவிட்டனர். இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், மத்திய அரசு, தமிழக அரசை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்ப்பதாகக் குற்றம்சாட்டினார். இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் வழக்கறிஞர் கதிர்வேலு, மத்திய குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்டு, அடுத்தகட்ட குழுவிடம் அனுப்பப்பட்டுவிட்டது என்றார். இன்னும் 2 வாரங்களில் தமிழகத்திற்கான கஜா புயல் நிவாரண நிதி முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, மத்திய அரசின் மாநிலங்களுக்கான பேரிடர் நிவாரணத் தொகையில் ஆயிரத்து 277 கோடியே, 62 லட்சம் ரூபாய் இருக்கும் நிலையில், தேவைப்படும் பட்சத்தில் தமிழக அரசு இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Next Story