ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
அரசு புறம் போக்கு நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடம் லஞ்சம் பெற்று கொண்டு பட்டா வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தங்கள் நிலங்களை பயன்படுத்துவதில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தலையிட கூடாது என உத்தரவிட கோரி கண்ணன் என்பவர் உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ள நிலம், ஓடை புறம்போக்கு நிலம் என்றும், அதற்கு அதிகாரிகளின் உடந்தையோடு சட்ட விரோதமாக பட்டா பெற்றுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சட்டவிரோதமாக பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது மட்டும் போதாது என்று கூறிய நீதிபதி, லஞ்சம் பெற்று, ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு ஆணையிட்டார்.
Next Story