ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.
x
காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது. 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த இருந்தனர். இதனால் புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படுவதோடு, அரையாண்டு தேர்வு நெருங்கி வரும் நிலையில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்தார். இதனை அவசர வழக்காக நீதிபதிகள் எடுத்துக் கொண்டனர். ஜாக்டோ ஜியோ சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்தார். போராட்டத்தால் மாணவர்களுக்கும், மக்களுக்கும் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இதை பரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் உரிய ஆலோசனை நடத்தியபிறகு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தெரிவித்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி அரசு அறிவித்த உத்தரவை நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை வரும் 10ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் கூறினர். மேலும் இதுதொடர்பான ஒரு நபர் குழு பரிந்துரையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்