புயலை தாங்கிய பனை மரங்கள் - தென்னை வீழ்ந்த போதும் நிமிர்ந்து நின்ற பனை
கடுமையான புயல்களையும் தாங்கி, நிமிர்ந்து நிற்கும் பனைகள் என்பது கஜா புயலின் போது நிரூபிக்கப்பட்டுள்ளதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
'கஜா' புயல், தமிழகத்தில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது. மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டுள்ளன, மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன, வாழை மரங்கள் மொத்தமாக விழுந்துள்ளன. சுமார் 46 லட்சம் தென்னை மரங்கள் முறிந்து விழுந்து விட்டன. இவை மீண்டும் துளிர்க்க வாய்ப்பில்லை என்பது வேதனையிலும் வேதனை. ஆனால், 'கஜா' கடந்து சென்ற பாதையில் இருந்த பனை மரங்கள் விழுந்ததாக, இதுவரை தகவல்கள் வரவில்லை. பனை மரங்கள் தலை நிமிர்ந்து நிற்பதையும், அதை ஒட்டியுள்ள இடங்கள் பெருமளவிலான பாதிப்பில் இருந்து தப்பி இருப்பதையும் பார்க்க முடிகிறது. ஆனால், பனை மரங்களின் எண்ணிக்கை தான் குறைவாக உள்ளது. பனை மரங்கள், புயலுக்கும் சாய்ந்து விடாத வலிமை கொண்டவை புயலில் இருந்து சுற்றியுள்ள இயற்கை வளங்களை பாதுகாத்திடும் சக்தி கொண்டவை.
இத்தகைய நன்மையை வழங்கிடும் காரணத்தினால் தான் பனை மரத்தை 'பூலோகத்தின் கற்பகத்தரு' என்று சொல்கின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு அடையாளங்களில் மரத்திற்குரிய அடையாளமாக பனை மரத்தையே குறிப்பிடுகின்றனர். கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன்னரே தோன்றிய காலத்தவர் என்ற பெருமைக்குரிய நம் முன்னோர், பனை மரம் வளர்ப்பதில் அதிகப்படியான கவனம் செலுத்தியுள்ளனர். பனை மரம் எத்தகைய சூறைக் காற்றிலும் வீழ்ந்திடாத தன்மை கொண்டவை... புயல் காற்றுகளில் உண்டாகும் பெரும் சூறாவளிக் காற்றைத் தடுத்து மக்களை பாதுகாத்திடக் கூடியவை என்றும் உறுதியாக சொல்லலாம். காற்றின் வேகத்தை தடுத்து, காற்றினை மேலே அனுப்பிவிடக் கூடிய வல்லமை பெற்றவை பனை மரங்கள். இந்த காரணத்திற்காகவே, நமது முன்னோர்கள் கடற்கரை ஓரங்களில் பனை மரங்களை வளர்த்து வந்துள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, காற்று மாசை பனை மரத்தினால் மட்டுமே கட்டுப்படுத்திட முடியும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.வரும் காலங்களில் புயலின் அழிவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளக்கரை, ஓடைகள், ஆறு, ஏரிகளின் கரைகளில் என்று, எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பனை மரங்களை நட்டு வளர்ப்போம். நமது சந்ததிகளை புயல் ஆபத்திலிருந்து பாதுகாப்போம் என்று, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story