சபரிமலை விவகாரம் : புதுச்சேரியில் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம்
சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக புதுச்சேரியில் பாஜக சார்பாக 'முழு அடைப்புப் போராட்டம்' நடைபெறுகிறது.
சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில் இந்துக்களுக்கு எதிராக கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு செயல்படுவதாக புதுச்சேரி மாநில பாஜக குற்றம்சாட்டியுள்ளது. கேரள அரசை கண்டித்து நடைபெற்றுவரும் முழு அடைப்பு காரணமாக, தமிழக மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள் பலத்த பாதுபாப்புடன் இயக்கப்படுகின்றன.
தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். புதுச்சேரியில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. 9 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. இந்து முன்னணி தலைவர் சனில்குமார் உட்பட பாஜக முக்கிய பிரமுகர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய வீதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
பாஜக மாநில தலைவர் தலைமையில் மறியல் :
புதுச்சேரியில், அம்மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தலைமையில் பாஜகவினர், மறியலில் ஈடுபடுவதற்காக ஊர்வலமாக சென்றனர். இந்திராகாந்தி சதுக்கம் பகுதியை நோக்கி சென்ற 100-க்கும் அதிகமானோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது, போலீசாருக்கும்-பாஜகவினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே, போலீஸ் வாகனத்தின் சாவியை யாரோ எடுத்துச் சென்றதால், பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போலீஸ் வாகனங்களின் குறுக்கே இரு சக்கர வாகனங்களை நிறுத்தி பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்துக்கு பிறகு, கைதானவர்கள் அனைவரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
Next Story