கஜா புயலால் பாதிக்கப்பட்டாலும் மனம் தளராத விவசாயி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட போதும், மனம் தளராத விவசாயி ஒருவர், தனது வயலில் உழவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கஜா புயலால் உருக்குலைந்து போன மாவட்டங்களில் முறிந்து விழுந்த மரங்களும், கண்ணீருடன் காட்சி தரும் மக்களையே காண முடியும். இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்புகளை உண்டாக்கி விவசாயிகளை கண்ணீரில் ஆழ்த்தி விட்டு சென்றிருக்கிறது கஜா புயல். விவசாய நிலங்களும் பல பகுதிகளில் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இதனால் மீண்டு வர முடியாத சோகத்தில் டெல்டா பகுதி விவசாயிகள் உள்ளனர். இருந்தபோதிலும் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஆண்டிவயல் கிராமத்தில் மாடுகளை ஏரில் பூட்டி உழவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார் விவசாயி பன்னீர்செல்வம்.
54 வயதான பன்னீர்செல்வம் என்ற இந்த விவசாயி வசித்து வந்த வீடும் புயலில் சிக்கியிருக்கிறது. ஆனாலும் மனம் தளராமல் ஏரை கையில் எடுத்து மாடுகளை அதில் பூட்டி உழவுப் பணியில் ஈடுபட்டிருக்கிறார் இந்த விவசாயி. ஒன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்து வருவதாக கூறும் விவசாயி பன்னீர்செல்வம், தனக்கு தெரிந்தது விவசாயம் மட்டுமே என்கிறார். என்னதான் இடர்பாடுகள் வந்தாலும் தனக்கு தெரிந்த தொழிலை திறம்பட செய்துவருவதாக கூறுகிறார். இவர் வயலில் இறங்கி வேலை செய்வதை பார்த்த பலரும் நிலத்தில் இறங்கி வேலை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புற்றுநோயுடன் போராடும் மனைவியை மீட்கவும், அன்றாட வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவும் பன்னீர்செல்வத்திற்கு கைகொடுப்பது விவசாயம் தான். நம்பிக்கையோடு தொழிலை கையில் எடுத்துள்ள இவரைப் போன்ற விவசாயிகளுக்கு அரசு உதவ முன் வர வேண்டும் என்பதே கோரிக்கையாக இருக்கிறது.
Next Story