திருவண்ணாமலையில் மலை உச்சியில் ஏற்றப்பட்டது, மகாதீபம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்ட நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் மலை உச்சியில் ஏற்றப்பட்டது, மகாதீபம் : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x
திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழாவை யொட்டி, சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் காலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பு எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து சரியாக 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி, சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் முன்பு வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.  அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது.அதே நேரத்தில் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.  அப்போது அங்கு கூடியிருந்த   லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

 திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மகாதீபம் : 'அரோகரா' கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருக்கார்த்திகை விழா நடைபெற்றது. முருக பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில், கார்த்திகையையொட்டி, மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. அங்குள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலின் மீது, பிரம்மாண்ட கொப்பரையில் 300 கிலோ நெய், 100 மீட்டர் திரி, 5 கிலோ கற்பூரத்தில் தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, 'அரோகரா' கோஷத்துடன், பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். 
பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை விழா

முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில், கார்த்திகை தீபத்தையொட்டி, தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டனர். பின்னர், மலை மீதுள்ள கம்பத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, பனை ஓலைகளால்  வேயப்பட்டிருந்த சொக்கப்பனை எரிக்கப்பட்டது. கொட்டும் மழையில் நனைந்தபடி, திருக்கார்த்திகை விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். 
திருத்தணியில் திருக்கார்த்திகை திருவிழா : பச்சரிசி மலையில் மகாதீபம்

திருத்தணி முருகன் கோவிலில், கார்த்திகையையொட்டி மூலவருக்கு பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நேற்று மாலை, கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை எரிக்கப்பட்டது. அதே நேரத்தில், எதிரில் இருந்த பச்சரிசி மலை மீது, பெரிய அகல் விளக்கில், 300 கிலோ நெய் மற்றும் 10 மீட்டர் நீளம் கொண்ட திரியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, கோவிலின் நுழைவு வாயில் முன்பு, வள்ளி, தெய்வானையுடன் முருக பெருமான் அருள் பாலித்தார். இதைத் தொடர்ந்து, வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் வீதியுலா வந்தார். 
 உச்சிப் பிள்ளையார் கோவிலில் கார்த்திகை மகாதீபம்


திருச்சி மலைக்கோட்டையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில், கார்த்திகையையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. கோவிலின், முன்புறம் உள்ள கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொப்பரையில் ஆயிரம் லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய்,  நெய் ஆகியவற்றை ஊற்றி மெகா திரியிட்டு தீபம் ஏற்றப்பட்டது. வாண வேடிக்கை முழங்க,  பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டு சென்றனர். 
பிரம்ம ரிஷி மலையில் கார்த்திகை தீப திருவிழா

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள பிரம்ம ரிஷி மலையில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. முன்னதாக,  மலையின், அடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோவிலில், சிறப்பு அலங்காரத்துடன் தீபாரதனை நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து, பிரம்ம ரிஷி மலை உச்சியில் பிரமாண்ட கொப்பரையில் 1008 மீட்டர் திரியுடன், 1008 கிலோ நெய் ஊற்றப்பட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. 



Next Story

மேலும் செய்திகள்