சுவாமிமலை முருகன் கோவில் தேரோட்டம் : ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தை அடுத்த சுவாமி மலை சுவாமிநாதசுவாமி கோயில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக இருக்கிறது கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை. சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .விழாவின் ஒன்பதாம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது . இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானை சமேத முருக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார் . இதனைத் தொடர்ந்து, சிவ வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் மேற்கு வீதியை அடைந்ததும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு வந்தனர்.
பொரி - பூஜை பொருட்கள் வாங்க சந்தையில் குவிந்த மக்கள் :
தமிழகம் முழுவதும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை இன்று மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனையொட்டி, வீடுகளில் தீபம் ஏற்றி கொழுக்கட்டை, பொரி, வெல்லம் ஆகியவற்றை இறைவனுக்கு படைத்து வழிபாடு நடத்துவார்கள். இதற்காக பூஜை பொருட்கள் வாங்க காலை முதலே பொது மக்கள் பாளையங்கோட்டை சந்தையில் குவிந்த வண்ணம் உள்ளனர். கொழுக்கட்டைக்கான பனை ஓலைகளின் விலை கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகரித்துள்ளது. 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒலை கட்டு 50 ரூபாய்க்கும்,45 ரூபாய்க்கு விற்கபட்ட இளம் குருத்து 100 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. விலை உயர்வு இருந்தாலும், பூஜை பொருட்கள் வாங்க மக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Next Story