போலீஸ் வலையில் சிக்கிய கொள்ளையன் 'பைபாஸ் ரைடர்'

ஈரோடு அருகே 80 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பைபாஸ் ரைடர் என்ற கொள்ளையனை சுற்றி வளைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
x
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்த தங்கவேலு மகன் பைபாஸ் ரைடர் என்ற மணிகண்டன். 41 வயதான மணிகண்டன் மீது 3 குண்டாஸ் உள்பட 80க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெண்கள், முதியவர்களை தாக்காமல் கொள்ளையடிப்பது மணிகண்டனின் தொழில் தர்மம். தேசிய நெடுஞ்சாலைகளில் பூட்டி கிடக்கும் வீடுகள்தான் மணிகண்டனின் இலக்கு. இதனால்தான் இவன் பெயருக்கு முன்னால் பைபாஸ் ரைடர் என்ற அடைமொழி ஒட்டிக் கொண்டது. பூட்டிய வீட்டுக்குள் நுழைந்து 10 நிமிடத்திற்குள் தன் கைவரிசையைக் காட்டி தப்பிவிடுவது பைபாஸ் ரைடர் மணிகண்டனின் ஸ்பெஷல்.  

ஆந்திர, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களையே கலக்கிய இவனைப் பிடிக்க போத்தனூர் கிரைம் ஏ. சி சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. செல்போன் நம்பரை வைத்து கொள்ளையனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், ஆந்திரா, கேரளா என சுற்றி திரிந்த பைபாஸ் ரைடர், நேற்றிரவு கோவை, ஈரோடு வழியாக சேலத்திற்கு புறப்பட்டுள்ளான் . 

இதையறிந்த போலீசார், பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் காத்திருந்தனர். பெருந்துறை சிப்காட் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் மணிகண்டன் தன் காருக்கு டீசல் நிரப்பிய போது போலீசார் அவனை சுற்றி வளைத்தனர். 

அவன் வந்த காரை சோதனை செய்த போது, வைரம், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள், கட்டுகட்டாக பணம், 8 செல்போன்கள், கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட 10க்கும் மேற்பட்ட இரும்பு ராடுகள் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பிடிப்பட்ட கொள்ளையன், தனிப்படை போலீஸ் சோமசுந்தரத்திடம் ஒப்படைக்கப்பட்டான். 

Next Story

மேலும் செய்திகள்