மூச்சுதிணறலால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஆக்சிஜன் செலுத்தும்போது சிலிண்டர் வெடிப்பு
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மூச்சுத்திணறல் ஏற்பட்ட பெண்ணுக்கு ஆக்சிஜன் கொடுக்கும் போது சிலிண்டர் வெடித்ததால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகர் என்பவரின் மனைவி தாமரைச்செல்வி, மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சலில் அவதிப்பட்டதால் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று மதியம் மூச்சு திணறல் அதிகமானதால், அவருக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதற்காக சிலிண்டரை செவிலியர்கள் எடுத்து வந்தனர். அப்போது சிலிண்டரின் வால்வை திறந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென பிரஷர் வால்வு வெடித்து, கேஸ் அதிவேகமாக வெளியேறியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிலிண்டரின் வாய்ப்பகுதி கேஸ் வெளியேறாதவாறு தடுத்தனர். இதற்கிடையில் மூச்சுதிணறலாலும், அதிவேகமாக கேஸை எதிர்கொண்டதாலும் தாமரைச்செல்வி
உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையை சூழந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story