மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்: நாடு முழுவதும் இன்று போட்டித்தேர்வு
மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான முதல்நிலைத்தேர்வு, நாடு முழுவதும் இன்று நடக்கிறது. இந்த வகை தேர்வில், தனியார் பள்ளி மாணவர்களே அதிகளவில் பயன்பெற்று வருகின்றனர்.
10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தி, அதில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு, மாதந்தோறும் கல்வி உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. 11ஆம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை மாதம் 1,000 ரூபாயும், பட்டப்படிப்பில் இருந்து, முதுகலை பட்டப்படிப்பு, பி.எச்டி., படிப்புகள் வரை அதிகளவில் உதவித்தொகையும் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
10 ம் வகுப்பு படிக்ககூடிய அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் நடத்தப்படும் இத்தேர்வில், விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். நவம்பர் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, மே மாதத்தில் இரண்டாம் கட்ட தேர்வு நடத்தி, மதிப்பெண் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான முதல் கட்ட தேர்வு, இன்று நாடு முழுவதும் நடக்கிறது. தமிழகத்தில், 1 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும், இரண்டாம் கட்ட தேர்வுக்குப்பிறகு 40 முதல் 50 மாணவர்கள் மட்டுமே தமிழகத்தில் இருந்து தேர்வு பெறுகின்றனர். இவர்களில், பெரும்பாலானோர் தனியார் பள்ளி மாணவர்கள். அதிகபட்சமாக, கடந்த ஆண்டு 80 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். இதிலும், அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை சொல்லிக்கொள்ளும்படி இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் பாடங்களில் உரிய பயிற்சி கொடுத்து, போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்க, கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!
Next Story