கனமழையால் தரைப்பாலம் சேதம் : சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே, கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், தற்காலிக தரைப்பாலம் ஒன்று சேதமடைந்துள்ளது.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே, கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், தற்காலிக தரைப்பாலம் ஒன்று சேதமடைந்துள்ளது.கட்டளை கிராமத்தையும், புலியூர்குறிச்சி கிராமத்தையும் இணைக்கும் இந்த பாலம் வெள்ளத்தில், அடித்து செல்லப்பட்டதால், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பாலத்தை சீரமைத்து தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழை
தஞ்சை மற்றும் சுற்று வட்டாரங்களில், வடகிழக்கு பருவமழை, தொடங்கியுள்ள நிலையில், சூரக்கோட்டை வல்லம் மாரியம்மன் கோவில், கீழவாசல், நாஞ்சிக்கோட்டை , பள்ளி அக்கரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழையால் தீபாவளி வர்த்தகம் பாதிப்பு
கும்பகோணத்தில் நேற்று கனமழை பெய்ததால், தீபாவளிக்கு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த மழையால் தங்களுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வணிகர்கள் தெரிவித்தனர்.
40 ஆண்டுக்கு பின்னர் காவிரி நீரால் நிரம்பிய குளங்கள்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள காக்கா குளம் 40 ஆண்டுகளுக்கு பின்னர், காவிரி நீரால் நிரம்பியது. திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் , மகாலிங்க சுவாமி கோயிலுக்கு சொந்தமான 33 தீர்த்தக்குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையில், காவிரி ஆற்றிலிருந்து காக்கா குளம் மற்றும் காருண்ய தீர்த்த குளத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் தடையின்றி வருவதை மக்கள் மகிழ்ச்சியுடன் பார்த்து சென்றனர்.
திற்பரப்பு அருவியில் வெள்ளம் - சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக சிற்றாறு அணை ஒன்றில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனாலும் மழையாலும் திற்பரப்பு அருவியில் தற்போது வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story