அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டியூஷன் : தனியார் நிறுவன ஊழியரின் 10 ஆண்டுகால கல்விச்சேவை
10 ஆண்டுகால இலவச கல்விச்சேவை மூலம், ஏழை மாணவர்கள் பலரது வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கும், இளைஞர்.
* தனியார் டியூஷன் சென்டர்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஏழ்மை நிலையிலான அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் பலர் அதிக மதிப்பெண்கள் பெறவும், கல்வியை தொடரவும் சிரமப்படுகின்றனர்.
* இந்த நிலையில், சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பட்டதாரியான ஹரிஹரன், கடந்த 10 ஆண்டுகளாக மீனவ குடும்பங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச டியூஷன் வகுப்புகள் மூலம் உதவி வருகிறார். ஆரம்பத்தில் நான்கு மாணவர்களுடன் தொடங்கிய டியுஷனில் இன்று 800 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர்.
* ஏழை மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில், தான் படித்த பள்ளியிலேயே இடத்திற்கு அனுமதி வாங்கி, ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச டியூஷன் நடத்தி தருகிறார். மாலை 6 மணிக்கு தொடங்கப்படும் டியூஷனில் முதலில் தன்னம்பிக்கை வகுப்புகளும், அதன் பின்பு பாடங்களும் சொல்லித்தரப்படுகிறது.
* மாணவ மாணவிகள் எதிர் காலத்தில் என்னவாகப்போகிறோம், என்ற லட்சியத்தை வைத்திருக்கிறார்களோ, அதன்படியே அவர்கள் அழைக்கபடுகிறார்கள். உதாரணமாக டாக்டர் கனவுடன் படிக்கும் மாணவர்கள் DR .என்ற அடைமொழியுடன் அழைக்கபடுகிறார்கள்.
* வாரம் ஒரு முறை நூலகம் அமைத்து, பாடபுத்தகங்கள் தவிர பிற புத்தகங்கள் படித்து பயன்பெறவும் வழிவகை செய்துள்ளார். சனிக்கிழமைதோறும் பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, பரமபதம்போன்றவற்றை சொல்லி கொடுத்து விளையாட்டு திறனையும் வளர்த்து வருகிறார்.
* தவிர, படிக்கும் மாணவர்களுக்கு தினமும் ஊட்டச்சத்துமிக்க தானிய உணவு வகைகளையும், இலவசமாகவே வழங்குகிறார்.
* தன்னிடம் படிக்கும் மாணவர்கள் பலர் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று உயர்கல்வியை தொடருவதாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார் ஹரிஹரன்.
* கல்வி வியாபாரமாகிவிட்ட இன்றைய சூழலில்
தனியார் நிறுவன ஊழியர் ஹரியின், 10 ஆண்டுகால இலவச கல்விச் சேவை, ஏழை மாணவர்கள் பலரது வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கிறது.
Next Story