ஸ்ரீரங்கம் கோவில் சிலைகள் திருட்டு புகார் : உயர் நீதிமன்றத்தில் 25 பக்க விசாரணை அறிக்கை தாக்கல்
ஸ்ரீரங்கம் கோவில் சிலை திருட்டு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை மற்றும் கோவிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைகள் மற்றும் புராதன பொருட்கள் திருட்டு புகார் தொடர்பான விசாரணை அறிக்கையை சீலிட்ட கவரில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தாக்கல் செய்தனர். 25 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையை ஆய்வு செய்து தகுந்த உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Next Story