வடிவேலு காமெடி போல ரூ.4 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் திருட்டு

நாலரை லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை நூதனமான முறையில் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வடிவேலு காமெடி போல ரூ.4 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் திருட்டு
x
குண்டக்க மண்டக்க படத்தில் வடிவேலு காமெடி போலவே சென்னையில் நிஜத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அப்ரீன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாலரை லட்சம் ரூபாய்க்கு வாங்கிய,  உயர்ரக இருசக்கர வாகனத்தை விற்பதாக இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில்  சேகர் என்பவரின் ஆட்டோவில்  சவாரிக்காக ஏறிய மர்ம நபர்  தன்னிடம் செல்போன் இல்லை என்று  கூறியுள்ளார். பின்னர் சேகரின் போனை வாங்கி, அப்ரீனிடம் பேசி, இரு சக்கர வாகனத்துடன் ஸ்டான்லி மருத்துவமனை அருகே வரச் சொல்லி இருக்கிறார். 

பின்னர் ஆட்டோ ஓட்டுநர் சேகரிடம் இந்த வாகனத்தை தாம் வாங்கினால் உங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய்  கமிஷன் கிடைக்கும் என்று கூறியுள்ளார் . இதனை நம்பிய சேகர் , அங்கு வந்த அப்ரீனிடம் இருசக்கர வாகனத்தின் விலை, ஆவணங்கள் குறித்து  பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். 

இதனை நம்பிய அப்ரீன், தன்னுடைய ஆர்சி புக் உள்ளிட்ட ஆவணங்களுடன் டெஸ்ட் ரெய்டுக்கு அந்த மர்ம நபரை உடன் அழைத்து சென்றுள்ளார். தங்கசாலை  மேம்பாலம் அருகே சென்ற போது பின்னால் அமர்ந்திருந்த அப்ரீனை கீழே இறக்கிய அந்த மர்மநபர் கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனத்துடன் மாயமானார்.

அதிர்ச்சியடைந்த அப்ரீன், ஸ்டான்லி மருத்துவமனை அருகே வந்து, ஆட்டோ ஓட்டுநர் சேகரை பிடித்து விசாரித்த போது, கமிஷனுக்கு ஆசைப்பட்டு அந்த மர்மநபருக்கு உதவி சிக்கிக் கொண்டது தெரிய வந்தது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை எல்லாம் பரிசோதித்து பார்த்ததில் ஆட்டோ ஓட்டுநர் சேகரின் முகமே பதிவாகி உள்ளது. மேலும் அப்ரீனிடமும் சேகரின் நம்பரை கொடுத்த அந்த மர்மநபர் சாமர்த்தியாக ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. 

தன்னுடைய அடையாளத்தை மறைத்துவிட்டு ஆட்டோ  ஓட்டுநர் ஒருவரை சிக்க வைத்து, உயர்ரக வாகனத்தை திருடிச் சென்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவம் சென்னையில் அரங்கேறியிருக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்