கருணைக் கொலை வழக்கு : சிறுவனை குணப்படுத்த ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்ததால் நீதிபதிகள் நெகிழ்ச்சி
மூளை பாதிப்புக்கு உள்ளான கடலூர் சிறுவனை குணப்படுத்த மறுவாழ்வு மையம் முன்வந்துள்ளதோடு ஏராளமானோர் உதவி செய்ய முன்வந்ததால் நீதிபதிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.
கடலூரை சேர்ந்த 10 வயது சிறுவன் மூளை பாதிப்புக்குள்ளானதால் அவனை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரி அவரது தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பாஸ்கரன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த மறுவாழ்வு மையம் ஒன்று சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தது. டிரிகர் பாயிண்ட் தெரபி மற்றும் பிசியோதெரபி சிகிச்சைகள் மூலம் சிறுவனை குணப்படுத்த வாய்ப்புள்ளதாக நீதிபதிகள் முன்னிலையில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல் ஆரணியை சேர்ந்த சித்த மருத்துவர் ஒருவரும் சிறுவனை குணப்படுத்த முடியும் என தெரிவித்தார். நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர் ஒருவர் சிறுவனுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான வரைவோலை வழங்கினார். அதேபோல் சிறுவனின் மருத்துவ உதவிக்கு தேவையான தொகையை வழங்க மற்றொரு வழக்கறிஞர் முன்வந்தார். அடுத்தடுத்து குவிந்த உதவிகளை பார்த்த நீதிபதிகள், கருணை உள்ளங்கள் இருப்பதால் தான் நாட்டில் இன்னும் மழை பெய்வதாக தெரிவித்தனர்.
Next Story