ஆடுகள் மிக குறைந்த விலையில் கிடைக்கும் ஓமலூர் ஆட்டுச்சந்தை

ஓமலூரில் வாரந்தோறும் நடக்கும் ஆட்டுச்சந்தை குறித்த சில தகவல்கள்
ஆடுகள் மிக குறைந்த விலையில் கிடைக்கும் ஓமலூர் ஆட்டுச்சந்தை
x
சேலம் மாவட்டம் ஓமலூரில் நடக்கும் ஆட்டுச்சந்தை அப்பகுதி மக்களிடையே பிரசித்தம்.காரணம் இந்த சந்தையில் ஆடுகள் மலிவாக கிடைக்கும் என்பதால் பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வருகிறார்கள். 

வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமையில் நடக்கும் இந்த சந்தைக்கு முதல்நாளே ஆயத்தப்பணிகள் தொடங்கி விடுகிறது. அதிகாலை கூடும் இந்த சந்தை நண்பகலுக்குள் முடிந்து விடுகிறது. அந்தளவிற்கு விற்பனை அமோகமாக நடப்பதாக கூறுகிறார்கள் வியாபாரிகள்... 

வெள்ளாடு, செம்மறியாடு, குறும்பாடு, பல்லையாடு என விதவிதமான ஆடுகளை இங்கு வாங்கிச் செல்ல முடியும். வீடுகளில் வளர்ப்பதற்கும் சரி, இறைச்சி தேவைக்கும் சரி இங்கு வந்து ஆடுகளை வாங்கிச் செல்ல ஏராளமானோர் வருகின்றனர். தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என பண்டிகை நாட்களின் போது பல கோடிகளை தாண்டி விற்பனை நடக்கும் சந்தையாக இருக்கிறது. 

சேலம் மாவட்ட மக்களுக்கு தேவையான இறைச்சி தேவையை பூர்த்தி செய்யும் சந்தையாக இது இருப்பதால் பல ஹோட்டல்களுக்கு இங்கு வந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். 

5 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. சேலத்தை சுற்றிலும் பசுமையான சூழல் இருப்பதால் ஆடு வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் அதிகம் இருப்பதை பார்க்க முடியும். 

ஆடுகளுக்கு தேவையான கயிறுகள், மணிகளும் இந்த சந்தையில் மலிவாக விற்பனை செய்யப்படுகிறது. விதவிதமான ஆடுகளை குறைந்த விலையில் வாங்கிச்  செல்ல உத்தரவாதம் தரும் சந்தையாக இருக்கிறது ஓமலூர் ஆட்டுச்சந்தை. 


Next Story

மேலும் செய்திகள்