மானிய விலையில் மீனவர்களுக்கு டிரான்ஸ்பாண்டர்கள் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கடலில் மீனவர்களின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள உதவும் கருவிகளை மானிய விலையில் வழங்குவது குறித்து பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் குறித்து சர்வதேச நீதிமன்றத்தை அணுக மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி மீனவர் பாதுகாப்பு சங்க தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இந்திய கடலோர காவல்படை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இலங்கை கடற்படையினர் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தான் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்வதாகவும்,கடந்த 6 மாதங்களில் 196 மீன் பிடி படகுகள் எல்லை தாண்டி மீன் பிடிக்க சென்றதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் மீனவர்கள் குழுக்களாக மீன் பிடிக்க செல்வதால் கடலோர காவல் படையினரால் அவர்களை தடுக்கவும் முடியவில்லை என்றும், மீன் பிடி படகுகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள இஸ்ரோ கண்டுபிடித்த 786 டிரன்ஸ்பாண்டர்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நேரில் ஆஜரான இஸ்ரோ அதிகாரிகள் ஒரு டிரான்ஸ்பாண்டரின் விலை 40 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவித்தனர். இந்த டிரான்ஸ்பாண்டர்களை மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்குவது குறித்து மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Next Story