மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை - அருவியாக கொட்டிய மழை நீர்

அருவியாக கொட்டிய மழை நீரை புகைப்படம் எடுத்து மகிழ்ந்த வாகன ஓட்டிகள்...
மலைப்பகுதியில் பெய்த பலத்த மழை - அருவியாக கொட்டிய மழை நீர்
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மல்லி அம்மன் கோயில் அருகே மழை நீர் அருவியாக கொட்டியது.  மழை நீர் சாலையை கடந்து வனப்பகுதி ஓடை வழியாக பெரும்பள்ளம் அணைக்கு சென்றது. அருவியாக கொட்டிய மழைநீரை கண்ட வாகன ஓட்டிகள் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

2 மணி நேரத்திற்கு மேல் பெய்த மழை - பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோட்டில் 2 மணி நேரத்திற்கு மேல் பெய்த நல்ல மழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோட்டில் காலை முதலே அதிகளவில் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலை 5 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு பேருந்து நிலையம், ரயில் நிலையம், பன்னீர்செல்வம் பூங்கா, வீரப்பன் சத்திரம், திண்டல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதால் குளிர்ந்த சூழல் நிலவியது.

கனமழை - விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், புதன்சந்தை, புதுசத்திரம், பெரியமணலி, வையப்பமலை உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. கடந்த  ஒரு வாரமாக தொடர்ந்து மிதமானது முதல் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மிதமான மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம் தீவு பகுதியில் மிதமான மழை பெய்தது. காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்த நிலையில், மாலை நேரத்தில் ராமேஸ்வரம் தங்கச்சி மடம்,  பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் சாரல் மழை மற்றும் காற்று வீசி வருவதால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். கடும் குளிர், பனிமூட்டம் மற்றும் மழை பொதுமக்கள் அவதி..

ஏற்காட்டில் கடும் குளிர்

ஏற்காட்டில் காலை முதல் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்ட நிலையில் நேற்று நண்பகல் முதல் பெய்ய துவங்கிய மழை மாலை 4 மணி வரை நீடித்தது. தொடர்ந்து பனிப்பொழிவுடன் கடும் குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மின்னல் தாக்கி தொழிலாளி பலி

தஞ்சாவூர்  மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் பரவலாக இடியுடன் மழை பெய்தது. செங்கிபட்டியை அடுத்த இராயமுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கவிதா என்ற தொழிலாளி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து கொண்டிருந்தார். திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை

சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தாயிபட்டி, பேராபட்டி, சித்துராஜபுரம், விளாம்பட்டி, நாராயணாபுரம் உள்ளிட்ட குதிகளில் சுமார் ஒரு மணி நேரம் நீடித்த மழையால், சாலைகளில் நீர்பெருக்கெடுத்து ஓடியது. கழிவு நீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாததால், ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நின்றது.


Next Story

மேலும் செய்திகள்