நூற்றாண்டுகளை கடந்து செயல்படும் மேலப்பாளையம் கால்நடை சந்தை

ஆடு, மாடு போன்ற கால்நடைகளை குறைந்த விலைக்கு வாங்க ஏற்ற மேலப்பாளையம் சந்தை குறித்த செய்தித் தொகுப்பு
நூற்றாண்டுகளை கடந்து செயல்படும் மேலப்பாளையம் கால்நடை சந்தை
x
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றாக இருக்கிறது மேலப்பாளையம் சந்தை.. நூற்றாண்டுகளை கடந்து இன்றும் விவசாயிகளின் வரவேற்போடு செயல்படுகிறது இந்த சந்தை. நெல்லை மாநகராட்சி நடத்தும் இந்த சந்தைக்கு வாரந்தவறாமல் வந்து செல்லும் வியாபாரிகள் உண்டு. வாரத்தில் 2 நாட்கள் நடக்கும் இந்த கால்நடை சந்தையில் ஏராளமான ஆடு, மாடுகள் வெரைட்டியாக கிடைக்கிறது. 

வாரந்தோறும் திங்கட்கிழமை மாட்டுச் சந்தையும், செவ்வாய் கிழமைகளில் ஆட்டு சந்தையும் இங்கு நடக்கிறது. மாட்டுச்சந்தையில் நாட்டு மாடுகள், எருமை மாடுகள், உழவு மாடுகள் என விதவிதமாக வாங்கிச் செல்ல முடியும். செவ்வாய் கிழமைகளில் நடக்கும் ஆட்டுச்சந்தைக்கு பல மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் இங்கே வருகிறார்கள். காரணம் குறைவான விலையில் ஆடுகளை வாங்கிச் செல்ல முடியும் என்பது தான்.

விற்பனையாளர்களிடம் இருந்து நேரடியாக வாங்கிச் செல்ல முடிவதால் இந்த சந்தைக்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் அதிகம் வருவதுண்டு. காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மக்கள் கூட்டத்துடன் நடக்கிறது இந்த கால்நடை சந்தை.

இதுமட்டுமின்றி கால்நடைகளுக்கு தேவையான மணிகள், அலங்கார பொருட்கள், சலங்கைகளும் மலிவாக கிடைக்கிறது. வாங்கிய கால்நடைகளை தங்கள் இடத்திற்கு கொண்டு செல்ல போதுமான வாகன வசதிகளும் இங்கு உள்ளதால் பல மாநில வியாபாரிகளும் இங்கு வந்து செல்கிறார்கள். இறைச்சிக்கான தேவைகளுக்காக மொத்தமாக வாங்கிச் செல்லும் மக்களும் உண்டு.. மொத்தத்தில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு இடமாக மேலப்பாளையம் சந்தை இயங்கி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்