சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைய அனுமதி : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கேரளாவின் சபரிமலை கோவிலில், அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து, தீர்ப்பு வழங்கி உள்ளது.
கேரளாவின் சபரிமலை கோவிலில், அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து, தீர்ப்பு வழங்கி உள்ளது.
இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என தீர்ப்பளித்த நீதிபதிகள்,
வழிபாட்டில் பாகுபாடு காட்டுவது அரசியல் சட்டத்திற்கு முரணானது என கருத்து தெரிவித்தனர்.
உலக புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேலான பெண்களும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேநேரம், 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களும் ஐயப்பனை தரிசிக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில்,
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.வரலாற்று சிறப்பு மிக்க இந்த வழக்கை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கான்வில்கர் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரித்தது. 4 நீதிபதிகள் ஒரே கருத்தில் இருக்க, பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் தீர்ப்பில் மாறுபட்டார்.
தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா,
பெண்களுக்கு நீண்ட காலமாகவே பாகுபாடு காட்டப்படுவதாக குறிப்பிட்டார். பெண்கள், ஆண்களை விட குறைந்தவர்கள் அல்ல என கூறிய நீதிபதிகள், பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் என்று தெரிவித்தனர். ஒரு புறம் பெண்கள் தெய்வங்களாக வணங்கப் படுவதாகவும், மறுபுறம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், கடவுள் உறவு உயிரியல் அல்லது உடலியல் காரணிகள் மூலம் வரையறுக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். எனவே, சபரிமலை ஐயப்பன் கோவில் வழிபாட்டில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள், உறுதிபட தீர்ப்பளித்தனர்.
"பெண்களுக்கு அனுமதி அளிக்க முடியாது" - உச்சநீதிமன்ற பெண் நீதிபதி தனி தீர்ப்பு
இதனிடையே, உச்சநீதிமன்ற பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளிக்க முடியாது என தீர்ப்பளித்தார். இது மத நம்பிக்கை சார்ந்தது என கூறிய அவர், பல உள்ளார்ந்த மத நம்பிக்கைகளை ஆராய வேண்டும் என
குறிப்பிட்டார். பெண்களுக்கு கோவிலில் வழிபடவும், இந்து மதத்தை பின்பற்றவும் உரிமை உள்ளது என கூறிய நீதிபதி இந்து மல்ஹோத்ரா, சபரிமலை கோவில் விவகாரம் என்பது இந்து மத நம்பிக்கை தொடர்பானது என்றார். இதற்கும், பெண் வழிபாட்டு முறைக்கும் தொடர்பில்லை என கூறிய அவர், குறிப்பிட்ட வயது பெண்களை, சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பதே சரியானது என்று நீதிபதி இந்து மல்ஹோத்ரா தீர்ப்பளித்தார்.
" பெண்களுக்கு அனுமதி : ஏமாற்றம் அளிக்கிறது" - திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தகவல்
சபரிமலை கோவிலில், அனைத்து வயது பெண்களுக்கும் நுழைய அனுமதி அளித்திருப்பது, ஏமாற்றம் அளிப்பதாக ஐயப்பன் கோவிலின் தலைமை நம்பூதிரி கண்டரரு ராஜீவரரு கவலை தெரிவித்துள்ளார். கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இருந்தபோதிலும், நம்பூதிரி குடும்பம், உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்கும் என தெரிவித்தார். திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார், உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப் படுத்துவதை தவிர்த்து வேறு வழி இல்லை என்றார். வருகிற 3 ம் தேதி, கூடி, ஆலோசித்து, உரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, பத்ம குமார் தெரிவித்தார்.
சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதி : மகாராணி தீபா வர்மா அதிர்ச்சி
சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைய அனுமதி அளித்து, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு , பந்தள மன்னர் பரம்பரையை சேர்ந்த தற்போதைய மகாராணி தீபா வர்மா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர்,இது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார்.
"ஏமாற்றம் அளிக்கக் கூடிய தீர்ப்பு" - சபரிமலை கோவிலின் தலைமை தந்திரி கண்டராரு ராஜீவரு
தீர்ப்பை மதிப்பதாகவும், அதே சமயம் இது ஏமாற்றமளிக்கக் கூடிய தீர்ப்பு எனவும், வேதனை தரக்கூடிய தீர்ப்பு எனவும் சபரிமலை கோவிலின் தலைமை தந்திரி கண்டராரு ராஜீவரு பேட்டியளித்துள்ளார்.
சபரிமலை விவகாரம் : தந்தி டிவி யின் 2017 கருத்துக்கணிப்பு முடிவுகள்
Next Story