சேலத்தில் கால்நடைகளுக்கென பிரத்யேகமாக இயங்கி வரும் சந்தை

சேலத்தில் கால்நடைகளுக்கென பிரத்யேகமாக இயங்கி வரும் ஒரு சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பு.
சேலத்தில் கால்நடைகளுக்கென பிரத்யேகமாக இயங்கி வரும் சந்தை
x
சேலம் மாவட்டத்தில் மணியனூர் பகுதியில் இயங்கி வருகிறது இந்த கால்நடை சந்தை... இந்த சந்தையின் சிறப்பே இங்கு எல்லாவிதமான வளர்ப்பு பிராணிகளும் கிடைக்கும் என்பது தான். இந்த சந்தையை தேடி பல மாநிலங்களில் இருந்தும் இளைஞர்கள் வாரம் தவறாமல் வருகிறார்கள். காரணம் இங்கு மலிவாக விற்கப்படும் பந்தயப் புறாக்கள் விதவிதமாக கிடைக்கிறது. கர்ணப்புறா, ரோமர், சாட்டின் சிராஞ்சி போன்ற புறாக்களும், கிணத்து சோங்கு, ஜடைகால் உள்ளிட்ட வளர்ப்பு புறாக்களும் இங்கு கிடைக்கிறது.

பார்ப்பதற்கு ஏதோ சரணாலயத்திற்குள் வந்த உணர்வைத் தருகிறது மணியனூர் சந்தை... வளர்ப்புக்காகவும், இறைச்சி தேவைக்காகவும் இங்கு வந்து ஆடுகளை வாங்கிச் செல்வோர் ஏராளம். அதேபோல் செல்லப் பிராணிகளில் தனித்துவம் பெற்ற லவ் பேர்ட்ஸ் வகைகளும் இங்கு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ஜோடி லவ் பேர்ட்ஸ் மற்ற இடங்களில் கிடைப்பதை விட நூறு ரூபாய் கம்மியாக இங்கு வாங்கிச் செல்ல முடியும். அதிலும் காக்டெய்ல், பிஞ்ஜாஸ், ஆப்ரிக்கன் லவ் பேர்ட்ஸ் போன்றவையும் வெரைட்டியாக கிடைப்பது இந்த சந்தையின் சிறப்பு.

துள்ளித் திரியும் முயல் குட்டிகளை வாங்க வேண்டுமா? மணியனூர் சந்தைக்கு வந்தால் பிடித்த வண்ணத்தில் குறைந்த விலையில் முயல் குட்டிகளை வாங்கிச் செல்லலாம். 50 ஆண்டுகளை கடந்து செயல்படும் இந்த சந்தைக்கு பல மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்லப்பிராணிகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் வான்கோழி, வாத்து, கிளி வகைகள் என எல்லாம் ஒரே கூரையின் கீழ் விற்பனை செய்யப்படுவது மணியனூர் சந்தையின் சிறப்பு.

கோழிகளை வளர்க்க விரும்புவோர் இங்கு வந்து தரமான நாட்டுக்கோழிகளை வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் இறைச்சிக்காகவும் இங்கு ஏராளமான கோழிகள் விற்பனை செய்யப்படுகிறது. கத்திக்கட்டு, வல்லூர், நூலான் போனற் உயர் ரக நாட்டுக் கோழி இனங்களையும் இந்த சந்தையில் நேரடியாக பார்த்து வாங்கிச் செல்ல முடியும். வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில் நடக்கும் இந்த சந்தையானது காலை 6 மணிக்கே களை கட்ட தொடங்கி விடுகிறது. பரபரப்பான இந்த விற்பனையானது இரவு 10 மணி வரை நடக்கும் என்பதும் இந்த சந்தையின் சிறப்பு. 50 ஆண்டுகளை கடந்தும் இயங்கும் இந்த சந்தைக்கு பல மாநிலங்களில் இருந்து தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்களால் திருவிழா கோலமாக காட்சி தருகிறது மணியனூர் செவ்வாய் சந்தை.


Next Story

மேலும் செய்திகள்