"தலைமைச் செயலக முறைகேடு விசாரணை ஆணையத்திற்கு புதிய நீதிபதியை நியமிக்க போவதில்லை" - தமிழக அரசு
புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு குறித்த விசாரணை ஆணையத்துக்கு புதிய நீதிபதியை நியமிக்கப்போவதில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு புகார் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ரகுபதி ஆணையத்தை எதிர்த்து கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், ஆணையத்தை கலைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் ஆணையத்தை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஆணைய பொறுப்பிலிருந்து நீதிபதி ரகுபதி ராஜினாமா செய்ததால், புதிய நீதிபதி நியமனம் குறித்து பதிலளிக்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணை, நீதிபதி சுப்பிரமணியம் முன்பு வந்தபோது, புகார்கள் தொடர்பான ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும், புதிய நீதிபதியை நியமித்து ஆணையத்தை தமிழக அரசு புதுப்பிக்கவில்லை என்றும் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் உயர் நீதிமன்றம் ஆணையத்திற்கு எதிரானது அல்ல எனவும் நீதிபதி தெரிவித்தார்.
Next Story