மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் இயங்கி வரும் கும்பகோணம் சந்தை

கும்பகோணத்தில் மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் இயங்கி வரும் சந்தை குறித்த ஒரு செய்தி தொகுப்பு
மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் இயங்கி வரும் கும்பகோணம் சந்தை
x
கும்பகோணம் உள்ளூர் ஊராட்சியில் செட்டிமண்டபத்தில் இயங்கி வருகிறது இந்த வாரச்சந்தை. பல கிராமங்களை இணைக்கும் பகுதி இது என்பதால் இந்த சந்தைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளான தக்காளி, முள்ளங்கி, வெங்காயம், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள் இங்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. 10 ரூபாய்க்கு கூறுகளாக விற்பனை செய்யப்படும் காய்கறிகளை கை நிறையவே இங்கு வாங்கிச் செல்லலாம்.

சுவையான முருங்கைக் கீரை, முருங்கைக்காய்களையும் இங்கே வாங்கிச் செல்ல முடியும்.  அகத்திக் கீரை, முளைக் கீரை என விதவிதமான கீரைகளையும் ப்ரெஷ் ஆக வாங்கிச் செல்ல முடியும் என்பதே இந்த சந்தையின் சிறப்பு. அன்றாட சமையலுக்கு தேவைப்படும் புளி, மிளகாய், கடுகு, மிளகு போன்ற அத்தியாவசிய பொருட்களும், மசாலா பொருட்களும் இங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. மாதாந்திர பயன்பாட்டிற்கு மொத்தமாக வாங்கிச் செல்லும் மக்கள் இங்கு வருகிறார்கள்.

வார விடுமுறையான ஞாயிற்றுக் கிழமையில் இந்த சந்தை நடப்பதால் தங்கள் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு உற்சாகமாக சந்தையை சுற்றிக் காட்டும் பெற்றோரையும் இங்கு பார்க்க முடிகிறது. காலை 6 மணிக்கே சந்தை தொடங்கினாலும் மாலை 4 மணிக்கு மேல் தான் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தங்களுக்கு தேவையான பொருட்களை எல்லாம் நிதானமாக வாங்கிச் செல்கிறார்கள் அப்பகுதி வாசிகள். இரவு 11 மணி வரை மக்கள் வெள்ளமாகவே காட்சியளிக்கிறது உள்ளூர் சந்தை.

அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவான கருவாடும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. நாட்டு கோழிகள், ஜவுளி ரகங்களும் அவ்வப்போது விற்பனை செய்யப்படுவதை பார்க்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வந்தாலும் மக்களின் வரவேற்பை பெற்ற ஒரு சந்தையாக உள்ளூர் சந்தை இயங்கி வருகிறது. மக்கள் வந்து செல்வதற்கு ஏற்றார் போல சாலை வசதிகளை மேம்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு முன்வைக்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்